Friday, November 6, 2009

எனது கோப்பைகள் சிரிக்கின்றன!


விருப்பமேயில்லை என்று அறிந்தேதான் அழைத்திருந்தேன் அவனை

வந்த கட்டாயத்திற்காவது விழைந்திருக்கலாம்; புன்னகைத்திருக்கலாம்

செத்த சொற்களை உதிர்த்து தன் கட்டாய இருத்தலை காட்டாமலிருந்திருக்கலாம்

கோப்பையைப் பிடித்த லாவகத்தை சற்றே மாற்றியமைத்திருந்திருக்கலாம்

எப்பொழுதும் போலல்லாமல் இடக்கையைப் பயன்படுத்தியிருக்க வேண்டியதில்லை

இருக்கையில் சற்றே தளர்ந்த தொனியிலாவது அமர்ந்திருந்திருக்கலாம்

பல சமயங்களில் சூழலின் இறுக்கமே சொல்லிவிடுகின்றன எல்லாவற்றையும்

விருப்பமின்றி அருந்துவதென்பது தெரிந்தே நஞ்சினை உட்கொள்வது போலாகும்

கோப்பை வேறு என்னைப் பார்த்து கெக்களிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது

அவனுக்கு தன்னை சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள தெரியவில்லை -

திரவமானது தான் ஊற்றப்படும் கோப்பையின் வடிவத்திற்கு மாறிக் கொள்வதைப்போல!

கலைக்கப்படாத மெளனத்தின் சாட்சியாய் தளும்பிக் கொண்டேயிருந்தது கோப்பை -

என் விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் இடையில் நிரம்புவதும், தீர்வதுமாய்!

நேரம் மெளனத்தின் சஞ்சலத்தை எப்பொழுதும் இருமடங்காக்கவே செய்கிறது

பற்றவைத்த சிகரெட் புகை வேறு மெளனத்திரையில் கறையேற்றிக் கொண்டிருந்தது

மகிழ்ச்சியாயிறங்காத ஒவ்வொரு மிடரும் துக்கத்துடனேயே தொண்டை கடந்தன

அவ்விடுதி அழகிகளின் நடன நளினங்களுக்காகவாவது மசிந்து தொலைத்திருக்கலாம்

அவன் இருத்தல் குறித்த என் அக்கறையை மேலும் உதாசீனப்படுத்திக் கொண்டேயிருந்தான்

துரோகங்களாவது மன்னிக்கத்தக்கவை; புறக்கணிப்புகளின் வலிகளை என்ன செய்ய?

மறுநாள் விடுமுறை வேறு! இளஞ்சூட்டு காஃபியுடன் கனக்கும் தலையை இலேசாக்கிக் கொள்ளலாம்

நான் பருகிய அப்புறக்கணிப்பு வேதனைகளின் பிம்பங்களை எங்ஙனம் அழிக்க?

என் வெறித்த பார்வைக்கு வலுவிழந்து காலியாக ஆரம்பித்தது கோப்பை

அவனுடைய கோப்பை நிரம்பாதது குறித்த கவலை என்னைவிட்டு அறவே போய்விட்டிருந்தது

ஓரிரு வன்ம வார்த்தைகளால் கனத்த அம்மெளனத்திரை கிழிக்கப்பட்டிருக்கலாம் -

சற்றே கவனக்குறைவால் கை நழுவி உடையும் ஒரு கண்ணாடிப் பேழையைப் போல!

முடியும்தான் என்றாலும் மேலும் இறுக்க விரும்பவில்லை நெருடும் அம்முடிச்சுகளை

என் சாத்தானின் ‘தற்காலிக வெள்ளை மனசுக்கு’ நான் நன்றி சொல்லிக் கொண்டேன்

அவ்விறுக்க சூழ்நிலையை இளகச்செய்ய கடைசியில் தானே உடைந்து சிதறியது என் கோப்பை!

Friday, November 7, 2008

கடவுள் இருக்கிறார்…!


“நாலரை - ஆறு நடை சாத்திடுவாங்க” - ரெண்டு ரூவா சீட்டு, அர்ச்சனைத்தட்டுடன் சில அவசர நடைகள்

“ஸ்பெஷல் தரிசனம் பதினஞ்சாம்!” - சலித்தபடி சவுக்குத் தடுப்பில் மஞ்சள் பை மாட்டினான் மொட்டைத்தலை

மீசை துடைத்து மணிக்கட்டு பார்த்த‌ கருத்தஉதட்டு கட்சி கரைவேஷ்டிக்கு யார் சிபாரிசிலோ ‘க்ளோஸ் – அப்’ காட்சி

மூட்டுவலி த‌ன் மூப்பின் சொத்தாகிப் போன ‘பாம்பட’ கிழவிக்கு முப்பது நிமிட‌ புண்ணிய‌ தரிசன காத்திருப்பு

சீட்டு சரிபார்த்தும் – பார்க்காமலும், மந்திரம் சொல்லியும் - சொல்லாமலும் நாழிக்கொரு தீப ஆராதனை

அரைத் தேங்காயானாலும் கொடுத்த தட்டே திரும்ப வந்ததில் பெருத்த சந்தோஷம் ‘பட்டுப்புடவை’ பெரியம்மாவுக்கு

பிரதோஷ பலன் வேண்டி, நந்தியின் ஒரு காது மறைத்து மறு காதில் குறை கொட்டினாள் ‘பிளாஸ்டிக் வளையல்’ புள்ளத்தாச்சி

“... திவ்ய‌தரிசனம் கண்டு பல‌ன் பெருவீர்!” - திருவிழாவையொட்டி கூட்டத்திடம் கூவி சொன்னது போஸ்டர் தட்டி

பிரகார வெளிச்சுவரின் தென்மேற்கு மூலையில் காரை பெயர்த்து கம்பீரம் கொண்டிருந்தது ஆறு அங்குல‌ ஆலஞ்செடி

“…செவுத்துல நெறைய தப்புமொளைங்க, வேர்ல ஆசிட் ஊத்த சொன்னதா நம்ம ஆறுமுக‌ங்கிட்ட மறக்காம சொல்லிடு…” -

தப்பு முளை த‌ன் கண்ணில் பட்ட கணம், செல்ஃபோனில் அதிகார அதட்டல் விடுத்தார் ஊர்த்தலையாரி

சரபேஸ்வரர் சந்நிதி சுவரில் ‘அவசரக்கடன்’ கழித்த காகமொன்று ப‌ட‌ப‌ட‌த்து பறந்த‌து வடகிழக்கு நோக்கி

‘சுர்’ரென்று சுட்ட வெயில் சுணக்கம் காட்ட, கருமேகக்‌ கண்டன‌ங்காட்டி கடுகடுத்து கரைந்தது ச‌னிமூலை

ரெண்டு நாள் கழித்து ஆறஅமர ஆறுமுகம் ஆசிட் ஊற்றுகையில், ந‌னைந்து நைந்திருந்த‌ன போஸ்ட‌ர் த‌ட்டிக‌ள்!

Thursday, August 7, 2008

பிரபஞ்சம் - ஒரு புதிர்!


பிரபஞ்சம் மட்டுமே புதிரா? பிற பஞ்சங்கள் புதிரல்லவா?
தீர்வுகள் காண வழியுண்டு பஞ்சப் புதிர்க‌ளுக்கு, விழைவில்லை நமக்கதற்கு
ஒரு புள்ளியில் செறிந்து நொடிகளில் பல்கிப் பெருகியதாம் பிரபஞ்சம்
காட்சி பிம்பம் பலதந்தும் அண்டம், பேரண்டம் ஒரே சமயம் விரிக்காதோ நம் விழிகள்?
எரிமீன்கள் பல‌ எறிந்து பால் வீதி வ‌ழிகடந்து –
பூமித்தாய் தூண்டில் சேர்வானவன், எரிபாலகனாம்!
மேற்கில் புதைத்து கிழக்கில் கிளப்பும் வாடிக்கை உட்பட‌ அனைத்துமே வித்தைகள்தான்
வித்தைகள் பயிலும் வித்தகர்கள் உணர்ந்திட்டனரோ சாத்திரத்தின் சூட்சுமமதை?
ஆரமிட்டு ஆராய்ந்து சூட்சுமத்தின் சாள‌ரங்கள் திறந்திடுமா ந‌ம் கலன்கள்
சுயம்பாய் திரியும் கேள்விகளைப் போல் இயற்கை நடத்தும் வேள்விகளும் விரிகிறது
ஆம், பிரபஞ்சம் ஒரு புதிர்தான்...
அது நாம் நெருங்க இயலா ஒரு வெப்பப் புதிர்!

Tuesday, July 15, 2008

கலையாத‌ மெளனம்


முன் பனிக்காலத்தின்
வைகறைப்பொழுதொன்றில்
என் பெயரை மெல்ல உச்சரித்துப்பார்
உனக்கும், எனக்குமான‌
மெளனம் விலகட்டும்!

மரங்களின் கண்கள்


ஒவ்வொரு இலை உதிரும்போதும்
திறந்து மூடுகின்றன‌ மரங்களின் கண்கள்
ஆயிரமாயிரம் திறந்து மூடல்கள் -
ஒவ்வோர் இலையுதிர்காலத்திற்கும்
எனினும், இலையுதிர்காலங்கள் தொடர்வதில்லை
வசந்தம் நோக்கிய‌
காத்திருப்புகளில் மகிழ்கின்றன மரங்கள்
மரங்களுக்கான சில நியதிகள்
மானுடத்திற்கும் பொருந்தவே செய்கின்றன!

Monday, July 14, 2008

வெளிப்படாத புராதனங்கள்...


புரிந்து கொள்ளும் நிலையிலில்லை யாரும்
அறிய வைக்கவும் அவசியமில்லை

படிந்து கொண்டிருக்கின்றன‌ நினைவுகள் -
நமக்கல்லாத நாளையில் புதைய‌

மீண்டும் சில‌ நினைவுகள் மலரலாம் -
நாளை மறு நாள் புதைவதற்கு

புதைபவை எல்லாம் அழிபவையல்ல‌ -
அவை புராதனச் சின்னங்கள்

புரிதல்கள் அறிந்த உலகில்
அப்புராதனங்கள் ஒரு நாள் வெளிப்படும்

அவை நாமல்லாத உலகாயிருக்கலாம்

காலம் மட்டுமே சாஸ்வதம்

வெளிப்படாத புராதனங்கள்
காலத்தின் கதவுகள் நோக்கியே காத்திருக்கின்றன‌!

‘ஜீரோ வாட்ஸ்’ சந்தோஷம்


நினைவுகளின் நீட்சிக்கான கால அவகாசத்தில் விரிகிறது,
மின்துண்டிப்பு செய்ய‌ப்ப‌ட்ட பின் மாலைப்பொழுதொன்று
நார்த்தங்குருவிகள் அமைதி காக்கின்றன‌
ஆந்தைகள் தலைதிருப்பி முறைக்கின்ற‌ன‌
தவிட்டுக்குருவிகள் திகைத்தோடுகின்றன‌
வைக்கோல்போர் பாம்புகள் உடல்சுருட்டி நெளிகின்றன‌
முன்னங்கால்கள் மடக்கி படுக்கின்றன சில மாடுகள்
‘இப்போதைக்கு வராதாம்!' - யாரோ உரத்து சொல்கிறார்கள்
அடுக்களை பாட்டிகள் உச்சுக்கொட்டுகிறார்கள்
தாத்தாக்கள் பேச்சைக் குறைக்கிறார்கள்
அப்பாக்க‌ள் சிரிப்ப‌து போல் தெரிகிறார்கள்
செட்டியார் சைக்கிள் பெடல் கிறீச்சிடுகிறது
மாட்டுக்கொட்ட‌கை பக்கத்திலிருந்து சன்னமானதொரு சீட்டியொலி
புத்தகங்கள் விசிறியெறியப்பட்டு விளையாட்டு களைகட்டுகிறது
என்றும் போலல்லாமல் மேட்டுத்தெரு ஊமையனும் கலந்து கொள்கிறான்
அம்மாக்கள் பிசையும் சோற்றில் நிலவொளியும் கலக்கிறது
சிதறிய மேகபஞ்சுகள் நிலவின் கறைதுடைக்க முற்படுகின்றன‌
பெயர் தெரியாத பறவைகள் வடக்கு நோக்கி செல்கின்றன‌
செவ்வ‌ரளி ம‌ர இலைகள் புதுப்பொலிவுபெறுகின்றன
காசித்தும்பைச் செடிகள் விரைந்து வேர்விடுகின்றன‌
கத்தரி பூக்கள் தம்மை மேலும் நிறமேற்றிக் கொள்கின்றன‌
வண்டுகளின் ரீங்காரத்துடன் சூலகமடைகின்றன மகரந்தத்தூள்கள்
பவழமல்லி வாசம் முற்றத்தில் பரவுகிறது
இதோ..... மின்னிணைப்பு திரும்ப கிடைக்கிறது…..
அம்மாக்கள் க‌டுமையாகிறார்கள்
குழந்தைகள் கண்செருக புத்தகம் பிரிக்கிறார்கள்
ஊமைய‌ன் எரிச்சலுடனே திரும்புகிறான்
செயற்கை வெளிச்சத்தில் இயற்கை தன்னை தோற்றதாகவே காட்டிக்கொள்கிறது
மெல்ல நகரும் மேகங்களால் மறையும் நிலவு அதையே பறைசாற்றுகிறது
மித‌ப்ப‌தும் பின் அமிழ்வ‌துவ‌மாக‌வே இருந்திருக்கிற‌து ச‌ந்தோஷ‌ம்
திடீர் ஹாரன் சத்தத்தில் சுழியாகிறது நினைவுகளுக்கான கால அவகாசம்
எதிர்ப்படும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கூசுகின்றன கண்கள்!